Thalaippu-news
பதாகை
RSS ஓடை

தமிழகம்

(4 வாக்குகள், சராசரியாக 4.75 ற்கு 5)

 

கிராமப் பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட பொதுச் சேவை மையங்கள் போதிய வசதிகளை பெற முடியாததால் செயல் இழந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் கிராம மக்களின் வசதிக்காக பொதுச் சேவை மையங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டது. இந்த மையங்கள் மூலம் கிராம மக்கள் ரயில், விமான டிக்கெட்டுகளை பெறுவது, மின்சார, டெலிபோன் கட்டணங்கள், பத்திரப்பதிவு துறை வசதிகள், ஆர்.டி.ஓ., லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துதல் உட்பட அனைத்து சேவைகளையும் பெறலாம். இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தியும் தேவையான விபரங்களை பெறலாம். இதற்காக மாநில அளவில் இரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன.

மதுரை உட்பட தென்மாவட்டங்களில் "3ஐ இன்போடெக்' நிறுவனம் இவற்றை நிர்வகித்தது. மாநில அளவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களும், மதுரை மாவட்டத்தில் 85 மையங்களும் துவக்கப்பட்டன. செயலிழக்கும் மையங்கள்: இதில் கிடைக்கும் வருவாய் ஏஜன்சிகளுக்கும், சேவை மையம் நடத்துவோருக்கும் 65:35 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவித்தனர். இதையடுத்து கிராமங்களில் படித்த பல இளைஞர்கள் ரூ. 1.25 லட்சம் டிபாசிட் செலுத்தி மையங்களை துவக்கினர். கம்ப்யூட்டர் சிஸ்டம், இன்டர்நெட் இணைப்பு போன்ற வசதிகளும் கிடைத்தன. கடந்த ஆண்டு டிசம்பரில் துவக்கப்பட்ட இம்மையங்களில் பல போதிய வசதிகள் கிடைக்க பெறாததால் இன்று செயலிழந்து விட்டன. இவற்றை நடத்தும் இளைஞர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. பல மையங்கள் குறிப்பாக நிலையூர், கோவில்பாப் பாக்குடி, சக்கிமங்கலம், ஆண்டார்கொட்டாரம், விளாச்சேரி உட்பட பல மையங்கள் திறக்கப் பட்டாலும் ஆட்கள் யாரும் வராததால் வெறிச்சோடியே கிடக்கின்றன.

அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு இன்னும் கிடைக்காததால் மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல் உட்பட வேறெந்த வசதிகளையும் பெற முடியவில்லை. இதனால் பல மையங்கள் தனியார் தொலைபேசி இணைப்புகளின் ரீசார்ஜ் மையங்களாகவும், இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவது, ரயில் டிக்கெட் பெறுவது போன்ற வசதிகளுடன் மட்டுமே செயல்படுகின்றன. கிராம அளவில் ரயில், விமான டிக்கெட்டுகளை பெறுவோர் இல்லாததால் இம்மையங்களில் அந்தச் சேவையையும் அதிகமாக அளிக்க முடியவில்லை.

காரணம் என்ன?: இது தொடர்பாக 3 ஐ இன்போ டெக் மையங்களில் விசாரித்த போது, ""மதுரை மட்டுமல்ல மாநில அளவிலும் மையங்கள் அனைத்தும் செயல்பட்டே வருகின்றன'' என்றனர். மாநிலம் முழுவதுமே முழுமையாக செயல்படவில்லை என்றே இத்துறை சார்ந்த அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த டிசம்பரில் துவக்கி வைக்கப்பட்ட பின்பு, திருமங்கலம் இடைத்தேர்தல், பின்பு பொதுத் தேர்தல் வந்தது. எனவே இந்த மையங்களுடன் இணைந்து செயல்படவேண்டிய தேசிய தகவல் மையத்தின் (நிக்) சேவையை முழுமையாக பெற முடியவில்லை. அதன் பின்பு ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டிய ஏஜன்சிகளும் போதிய ஆர்வம் காட்டியிருந்தால் அரசை நிர்பந்தித்து இந்த வசதியை முழுமையாக செயல்படுத்த ஏற்பாடு செய்திருக்கலாம்.

 

(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

 

சென்னை- திருச்செந்தூர் இடையே ஈரோடு, சேலம், மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0657) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.

திருச்செந்தூரில் இருந்து 23-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0658) மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரெயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

 

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை 5-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஒத்தவாடை சண்முகம் (வயது 38). இவர் லாரி டிரான்ஸ் போர்ட் தொழில் செய்து வந்தார். அந்த பகுதியில் ஏதாவது பிரச்சினை என்றால் இவரே தலையிட்டு பேசி முடித்து விடுவார் அந்த வகையில் பாதிக்கப்பட்ட சிலர் சண்முகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ராஜாவுடன் நேற்று இரவு மணலி சென்று விட்டு திரும்பினார். வழியில் ராஜாவை இறக்கிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். புது வண்ணாரபேட்டை மாதா கோவில் தெருவில் வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் வழி மறித்தது. அவர்கள் கையில் வீச்சரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

அசம்பாவிதம் நிகழப்போவதை உணர்ந்த சண்முகம் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். அதற்குள் கொலை வெறி கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் சண்முகத்தின் தலை மார்பு, கழுத்து என 30 இடங்களில் வெட்டு விழுந்தது. இருந்தாலும் உயிர் தப்பிக்க ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் கொலைவெறி கும்பல் விடாமல் துரத்திச்சென்று அவரை வெட்டி சாய்த்தது. பின்னர் கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

குற்றுயிரும் குலை உயிருமாய் உயிருக்கு போராடிய சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இரவு 11.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஒத்தவாடை சண்முகத்தை அவரது எதிரிகள் தீர்த்து கட்டி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக் கும்பலில் 6 பேர் இருந்தாலும் இதன் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

 

முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. "ஆய்வுப் பணி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, 2006 பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த கேரள அரசு, மாநிலத்தில் உள்ள எந்த அணையின் நீர்மட்டம் தொடர்பாகவும் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில், "கேரள நீர்ப்பாசன மற்றும் தண்ணீர் பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2006' என்ற சட்டத்தை இயற்றியது. அத்துடன் முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டவும் திட்டமிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரகாஷ் வாதிடுகையில், ""புதிய அணைக்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், தமிழக அரசின் மனு மீதான விசாரணையை இரண்டு மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரதான மனு மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்தனர். அதனால் இன்றும் விசாரணை தொடர்கிறது.

 

 

தமிழகத்தில் நெல்லையில் தான், கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவோடு அசம்பாவிதங்களின்றி முடிந்தது. சில இடங்களில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டன. காலம்காலமாக பிரச்னை இருந்த திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை, திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சுமுகமாக ஊர்வலம் நடந்தது. இது போலீசாருக்கு பெருமையான விஷயம்.

கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இதில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லையில் தான் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலத்தில் பதிவான "ஆன்-லைன்' லாட்டரி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் ஊடுருவதை தடுக்க கன்னியாகுமரி, மதுரை, கோவை மாவட்ட எல்லை செக்-போஸ்ட்டுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மணல், அரிசி, எரிசாராயம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்த இயக்கங்களை ஆதரித்து பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை நகரில் "வாரம் ஒரு வீதி' திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இத்திட்டத்தை மற்ற நகரங்களிலும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

Please login to be able to chat.

விளம்பரம்

ஒரு நிமிடம் கவனியுங்கள்

உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு?

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2