
ஆம்!.... பந்து வீச்சாளரால் பந்தை விளாசவும் முடியும் அதுவும் தொடர்ச்சியாக எதிர் பந்து வீச்சாளரை திணற வைக்கவும் முடியும் என்று நிருபித்து உள்ளார் ஹர்பஜன் சிங்.
தற்போது நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் நியுசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தான் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்த சாதனையை தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்ததன் மூலமாக எட்டியுள்ளார்.
1980ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் பிறந்த இவர் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் பந்தை சர்வதேச அளவில் வீச தொடங்கினார். எப்போதுமே மிகவும் ஆக்கிரோசமாகவே செயல் படும் இவர் தனது சுழற்பந்து வீச்சு மூலம் எதிர் அணியை சுழற்றி அடித்துள்ளார். சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்பிலேவிற்கு பிறகு சுழற்பந்து மூலம் இந்திய அணியை வழி நடத்துபவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 88 டெஸ்டில் (15 -11 -2010 நிலவரப்படி ) விளையாடியுள்ள இவர் 25002 பந்துகளை வீசி 11766 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 369 மட்டையாளரை பெவிலியன் திருப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் 84 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுக்களை எடுத்தது தான் அவரது மிகப்பெரிய இன்னிங்ஸ் சாதனையாகும். அதே போட்டியில் மொத்தம் பதினைந்து விக்கெட்டுக்களை சாய்த்தார் எனபது கூடுதல் செய்தி. இது மட்டுமா? அவரின் சாதனை பட்டியல் தொடர்கிறது டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியிலும் அவர் எதிர் அணியினரை விட்டு வைக்கவில்லை. 212 போட்டியில் விளையாடி 11075 பந்துகளை வீசி 7949 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 242 மட்டையாளர்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து தான் அவரது ஒருநாள் போட்டிகளில் சாதனையாகும்.
இவ்வாறாக பந்து வீச்சில் சாதனைகளை குவித்துக்கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங் தன்னால் பந்தை விளாசவும் முடியும் என்று நிருபித்துள்ளார். சாதரணமாக ஒருநாள் போட்டிகளில் தனது ஆக்கிரோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த அவர் டெஸ்ட் போட்டியிலும் அவரது திறமையை நிருபித்துள்ளார். நியுசிலாந்திற்கு எதிராக நவம்பர் 4 தேதி நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 69 ரன்களை எடுத்த இவர் இரண்டாவது இன்னிங்சில் 115 ரன்களை எடுத்து தனது முதல் சத்தத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பேட்டிங்கிற்காக முதன் முறையாக ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இது போதாதென்று இரண்டாவது போட்டியிலும் அதுவும் முதல் இன்னிங்சில் மீண்டும் சதம் அடித்து தனது பேட்டிங் திறமையை நிருபித்துள்ளார்.
ஆட்ட நாயகன் விருது பெற்றவுடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் " டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்காக ஆட்ட நாயகன் விருது பெறுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒருநாள் போட்டிகளில் கூட இந்த வாய்ப்பு உள்ளது. அனால் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது கிடைப்பது அதுவும் ஒரு பந்து வீச்சாளரான எனக்கு கிடைப்பது உண்மையிலேயே அதிசயம் தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஹர்பஜன்.
ஒரு பந்து வீச்சாளரால் பந்தை விளாசவும் முடியும் என்று நிருபித்துள்ளார் நமது பஞ்சாப் சிங்கம் ஹர்பஜன் சிங்.


