
தி.மு.க வின் ஆணைப்படி தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா இன்று பதவி விலகினார்.
இந்தியா மட்டும் அல்ல உலகத்தில் அரசியல் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.. அதுவும் தேர்தல் காலங்களில் அதன் உக்கிரம் மிக அதிகமாகவே இருக்கும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவிலகக் கோரி பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறு ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஏகோபித்த குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
ஆ. ராசா ஊழலில் ஈடுபட்டாரோ இல்லையோ.. ஆனால் இதை வைத்து மிகப்பெரும் அரசியல் நாடகமே அரங்கேறியது ., அரங்கேறிக் கொண்டிருக்கிறது!. தி.மு.க ஆட்சிக்கு பல நெருக்கடிகள் இருந்தாலும் ஒருசிலவற்றை இல்லை என்று மறுத்தும், ஒரு சிலவற்றை உவமைகள் மூலமாகவும் சமாளித்து வருகிறது தி.மு.க. இது போதாதென்று ஆ.ராசாவின் விவகாரம் மேலும் தர்மசங்கடமான நிலையை தி.மு.கவிற்கு ஏற்படுத்திவிட்டது.
தி.மு.க மற்றும் காங்கிரசின் உறவை சிதைக்க பலவகையான நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னால் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும் தற்போதைய எதிக்கட்சித் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக மறைமுகமாக காங்கிரசிற்கு அழைப்பு விடுத்தார், இது தி.மு.க தரப்பிலும் டெல்லியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிறிது கலக்கம் தி.மு.கவிற்கு ஏற்பட்டாலும் டெல்லியில் இருந்த பதிலில் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானர்கள். இதனால் தான் "அ.இ.அ.தி.மு.கவிற்கு கதவு மூடிவிட்டது, என்ன நடக்கும் என்று எங்களுக்கு தான் தெரியும்" என்று திரு.மு.கருணாநிதி செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு தனது பதிலை கூறினார்.
இருப்பினும் காங்கிரஸ் தலைவரான திருமதி. சோனியா காந்தியின் நேரடி பதில் எதுவும் வரவில்லை மேலும் பிரதமர் திரு.மன்மோகன் சிங் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது "முடிவு தலைமை எடுக்கும், என்னால் எதுவும் கூற முடியாது" என்று நழுவிக்கொண்டார். இதனால் சிறிது கலக்கம் தி.மு.கவிற்கு இருந்து கொண்டே இருந்தது.
இருப்பினும் "எந்த தவறையும் நான் செய்யவில்லை பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று ஆ.ராசாவும், "அவர் எதற்காக பதவி விலக வேண்டும், அவர் தவறே செய்யாத போது அவரைப்பற்றி மத்திய அரசிடம் நான் ஏன் பேச வேண்டும் " என்று கருணாநிதியும் நிருபர்களுக்கு பதிலளித்தார்கள். இந்நிலையில் சிறிது பரபரப்பைக் கூட்ட அல்லது இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க., அமைச்சர் ஆ.ராசாவை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஆ.ராசா தனது பதவியை துறப்பதாக அறிவித்தார். தனது பதவி விலகளுக்கலான கடிதத்தை பிரதமரிடம் அவர் வழங்கினார்.
"எனது தலைமை என்னை பதவி விலகும்படி ஆணையிட்டுள்ளது, எனது தலைமையின் கட்டளையை நிறைவேற்றவே எனது பதவியை துறக்கின்றேன், எந்த தவறுக்கும் நான் சொந்தக்காரன் இல்லை " என்று அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
தி.மு.க. தரப்பில் கூறும் போது " நாடாளுமன்ற நடவடிக்கைகள் நன்றாக நடக்கவே அவரை பதவி விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, 1999 ஆண்டு இருந்த நடைமுறையை பின்பற்றியே அமைச்சர் ராசா தனது கடைமைகளை நிறைவேற்றினார். அவரின் தவறுக்காக இந்த பதவி விலகல் இல்லை" என்று அறிக்கை விட்டுள்ளனர்.
இன்னும் என்னவெல்லாம் நாடகங்கள் நிறைவேறும் என்று தெரியவில்லை. தமிழகத்திலும் தேர்தல் நெருங்குகின்றது .... பரபரப்புகள் ஆரம்பமாகின்றன.


