திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2012 02:16
காங்கிரசுடன் தேசிய அரசியலில் கூட்டணி வைத்துக்கொள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தலைவரும் முன்னால் முதல்வருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்," 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசா மீது இரண்டரை ஆண்டிற்கு முன்னால் இருந்தே குரல் கொடுத்த முக்கியத் தலைவர்களில் நானும் ஒருவர் என்பதை இங்கே நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் அ. ராசா மீதான குற்றச்சாட்டு என்ன?, 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? என்று மக்களுக்கு தெரிந்து கொள்ள இவ்வளவு கால அவகாசம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலை வேறு 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி குழந்தை முதல் பெரியவர் வரை ஏன் சாதாரண மனிதர்கள் கூட தெரு முனையில் விவாதிக்கும் அளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் ஊழல் (ரூ.17 ,60 ,00 ,00 ,00 ,000) மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசாவின் தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இது வரை அவர் மீது தி.மு.க.வோ அல்லது மத்தியில் ஆளும் காங்கிரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் காங்கிரசை ஊழலைக்கண்டு மன்னிப்பவர்கள் என்று நம்மால் கூற இயலாது காரணம் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான் போன்றோர்களின் மீதுள்ள குற்றங்களின் காரணமாக அவர்களின் பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்தது இதிலிருந்து அவர்களின் பொறுப்பு சரியாக புலனாகிறது. மேலும் இவை அனைத்தையும் விஞ்சும் வகையில் ஊழலில் ஈடு பட்டுள்ள அமைச்சர் அ. ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் காரணம் நன்றாகவே புரிகிறது. அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தி.மு.க. மத்தியில் இருந்து விலக நேரிடும் இதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் இடைதேர்தலை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது.
இதில் நான் ஒன்று உறுதியளிக்கிறேன் அதாவது தி.மு.க., மத்தியில் இருந்து விலக நேரிடும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பதினெட்டு சீட்டு தேவைப்படும். எனவே எங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்பது சீட்டுக்கள் மற்றும் எனது நட்பு கட்சிகளின் சீட்டுக்களையும் சேர்த்து பதினெட்டிற்கும் சற்று மேலாக என்னால் வழங்க முடியும். அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்று இங்கு கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மேலும் இந்தியாவும் இடைதேர்தலை சந்திக்க நேரிடாது.
அனைத்து நடவடிக்கைகளுமே பிரதமரின் கவனத்திற்கு பினனால் தான் எடுக்கப்பட்டது என்று அமைச்சர் அ. ராசா மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் இதனால் பிரதமரின் பெயருக்கும் களங்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் நற்பெயர் கெடாமல் இருக்க அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி காங்கிரசிற்கு இல்லை. மேலும் அமைச்சர் அ. ராசாவே முன்வந்து தாமாகவே பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றமும் மத்திய முதன்மை கணக்கு இயக்கமும் பகிரங்கமாக நடவடிக்கை எடுக்கும்படி கூறிய பிறகும் மத்திய அரசு காலம் கடத்துவது ஆட்சிக்கு ஆபத்து என்பதை தவிர வேறேதும் இருப்பின் அதைப்பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு நாங்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்தும் காங்கிரஸ் அமைச்சர் அ. ராசா மீது நடவைக்கை எடுக்கவில்லை என்றால், இது மக்களின் போராட்டமாக உருவெடுக்கும். அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் அதனை நானே முன்னின்று வழிநடத்துவேன். வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே எனது தலையாய கடமை ஆகும், இருப்பினும் இந்த இந்திய நாட்டின் குடிமகளாகிய மற்றும் நாட்டின் பொறுப்பான அரசியல் கட்சித்தலைவர் என்ற முறையில் நான் இவ்வளவு பெரிய ஊழலைக்கண்டு அமைதியாக இருக்க முடியாது. " என்று செல்வி.ஜெ. ஜெயலலிதா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் " மத்தியில் எனது பங்கு என்ன என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும், மத்தியில் எனது பங்கை பற்றி கேட்பதனால் எனது உணர்வுகளை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு மத்தியில் முக்கிய பங்கு கிடைக்கும் பட்சத்தில் எனது முதல் வேலையாக நாட்டின் பாதுகாப்பிற்கு அதன் தேவைகளை கவனிப்பேன். தற்போது உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீனா திகழ்கிறது, அதனை எதிர்க்க நமக்கு வலிமை உள்ளதா? என்னைக்கேட்டால் இல்லை என்றே கூறுவேன்.
தற்போது தொடர்ச்சியாக சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களை நாம் மென்மையாக கையாண்டு கொண்டிருக்கிறோம், திருமதி.இந்திரா காந்தி போன்றவர்கள் இப்போது இருந்திருந்தால் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை சீண்டக்கூட செய்திருக்காது. மேலும் மதிய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு எப்போதும் ஒரு பங்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். " இவ்வாறு கூறி செல்வி.ஜெ. ஜெயலலிதா தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.
செல்வி.ஜெ. ஜெயலலிதா தனது நிலையை பற்றி இவ்வாறு கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் மிகப்பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தி.மு.க. எங்களது பிரதான கூட்டணிக்கட்சி, அவர்களுடன் எங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. டெல்லியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பேட்டி எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனபது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பதிலில் தான் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.
முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை முதல்வர் கருணாதியின் மகளும் மத்திய அமைச்சருமான கனிமொழி சந்தித்து அமைச்சர் அ. ராசா பற்றி விவாதித்ததாக தெரிகிறது.