புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:43
டீ குடித்தால்தான் நமக்கு பெரும்பாலும் பொழுதே விடியும். அப்படிப்பட்ட டீ பற்றிய ஒரு நல்ல தகவல் இங்கே. தினமும் டீ குடித்து வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டீ குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்கனவே பல ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. இதற்கிடையில், பிரிட்டன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் மேற்படி இந்த உற்சாகமான தகவல் தெரிய வந்துள்ளது. தினமும் 3 கோப்பையோ அல்லது அதற்கு மேலோ டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 70 சதவீதம் குறைவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் கேரி ரக்ஸ்டன் அறிவித்துள்ளார். டீ குடிப்பதால் கோப உணர்ச்சியும், மன அழுத்தமும் கட்டுப்படுகிறது. மேலும், இதயத்தில் ரத்தக்கட்டு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ரத்தம் செல்லக்கூடிய குழாய்கள் தூண்டப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இதனால்தான், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன என்று ரக்ஸ்டன் தெரிவித்தார்.