வெள்ளிக்கிழமை, 29 மே 2009 19:51
கல்லூரிக்கு செல்லும் டீன் ஏஜ் பையன் போலிருக்கிறார் பண்டி சரோஜ்குமார். அவரது பயோடேட்டாவை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. கண்களில் ஆர்வமும், வேலையில் சுறுசுறுப்புமாக இருக்கும் அவரது உற்சாகமான பேட்டியிலிருந்து... அது என்ன பண்டி சரோஜ்குமார்? தமிழில் இதுவரை கேள்விப்படாத பெயர்...? என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. தெலுங்கு குடும்பம். பண்டி என்பது குடும்பப் பெயர். சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம். தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி படித்தேன். உங்கள் வயது..? இப்போதுதான் 24 ஆகிறது. படம் இயக்குவது என்று முடிவான பிறகு தெலுங்குக்கு போகாமல் தமிழுக்கு வர என்ன காரணம்? தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆதரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்.