சனிக்கிழமை, 13 ஜூன் 2009 12:09
பத்து இயக்குனர்கள் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்ற விளம்பர வாசகங்களுடன் வெளிவந்திருக்கிறது இராசு மதுரவனின் மாயாண்டி குடும்பத்தார். காதல், பாசம், வீரம், துரோகம், பொறாமை, கோபம் என அனைத்தும் கலந்து காவியமாக மணக்கிறது இந்த கிராமத்து கதம்பம். அண்ணன், தம்பி குடும்பத்தின் சொத்து தகராறு என்ற மெல்லிய இழைதான் கதை. அதில் இராசு மதுரவன் தொடுத்திருக்கும் சரம், சில நேரம் கண்ணில் நீரை வரவழைக்கிறது, சில நேரம் சிரிப்பில் வயிறை குலுங்க வைக்கிறது. மாயாண்டியாக வரும் மணிவண்ணன் குடும்பத் தலைவர். நடிப்பிலும் இவரே தலைவர். மகன் தருண்கோபியின் படிப்புக்காக கண்ணீர்விட்டு கதறும்போது நம்மையும் கலங்கடிக்கிறார். மாயாண்டி மணிவண்ணனுக்கு மைல் கல். தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பிரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. சேரனின் இரண்டாவது அவதாரம்போல் எப்போதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருப்பது ஏனோ?