திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2012 02:26
சென்னை: ""ஜூன் இறுதியில் அல்லது ஜூலை துவக்கத்தில் பொறியியல் கவுன்சிலிங் நடக்கும்,'' என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். சென்னையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 333 தனியார் பொறியியல் கல்லூரிகள், 10 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், 11 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் அடங்கும். இன்றைய நிலையில் மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில், 85 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும், 50 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகிறது. இன்றுமுதல் வரும் 30ம் தேதி வரை தினசரி காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தல் காரணமாக 12, 13, 16 ஆகிய தேதிகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப் பங்கள் வழங்கப்படாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இம்மாதம் 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் (ஜாதிச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்) 250 ரூபாயும் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பத்தை நேரடியாக, 200 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் தபால் மூலமாக, "தீதீதீ.ச்ணணச்தணடிதி. ஞுஞீத/tணஞுச்2009' இணையதளம் மூலமாக என மூன்று முறைகளில் பெற முடியும். ஜூன் 20ம் தேதிக்குப் பின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மருத்துவக் கவுன்சிலிங்கிற்குப் பின், ஜூன் இறுதி அல்லது ஜூலை துவக்கத்தில் பொறியியல் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரி துவங்க 140க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்துள்ளனர். இதன்மூலம், கூடுதலாக 25 ஆயிரம் இடங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 10 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. தற்போது 41 இளநிலைப் படிப்புகளும், 69 முதுநிலைப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பொறியியல் படிப்பிற்கு எப்போதும் வரவேற்பு உள்ளது. அரசு உத்தரவுப்படி கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும். புதிய பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
கவுன்சிலிங் கடைசி நாளில் புதிய கல்லூரிக்கு அனுமதி கிடைத்தாலும் சேர்த்துக் கொள்ளப்படும். பி.ஆர்க்., படிப்பிற்கான விண்ணப்பம் தனியாக வழங்கப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக எம்.இ., ஸ்பேஸ் டெக்னாலஜி, எம்.பி.ஏ., ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட், எம்.ஆர்க்., அட்வான்சுடு ஆர்க்கிடெக்சர் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் துவக்கப்படுகின்றன. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார். இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்குப் பின் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறியியல் கல்லூரிகளில் சேர, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவீதம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு "தேர்ச்சி' என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப் பெண்களைப் பெறும் நம்பிக்கை உள்ள அனைத்து மாணவர்களும் விண்ணப்பங்களை வாங்கலாம். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பிளஸ் 2 மதிப்பெண்கள் வந்தபின் அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் அண்ணா பல்கலைக்கழக விசாரணை மையத்திற்கு, "044 - 2220 3617' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2009
விண்ணப்பங்கள் நேரில் கிடைக்கும் இடங்கள்
மதுரை: தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை-15, தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை- 11. அருள்மிகு மீனாட்சி கலை கல்லூரி, மதுரை- 2.
திண்டுக்கல்: எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல். அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் பாலிடெக்னிக், பழநி.
விருதுநகர்: வி.எஸ்.வி.என்.பாலிடெக்னிக், விருதுநகர். பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக், ராஜபாளையம். மேற்கண்ட இடங்களில் விண்ணப்ப படிவம் நேரில் கிடைக்கும்.
சிவகங்கை: அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை. ஏ.சி.பொறியியல் கல்லூரி, காரைக்குடி.
ராமநாதபுரம்: அரசு மகளிர் கலைக்கல்லூரி, ராமநாதபுரம்.
தேனி: தங்கமுத்து பாலிடெக்னிக், பெரியகுளம், கார்டமம் பிளான்டர்ஸ் சங்க கல்லூரி, போடிநாயக்கனூர்.